போடிநாயக்கனூர் அரண்மனை
Bodinayakkanur Palace
வரலாற்றுக்காலம்
நாயக்கர் காலம்
கூடுதல் விவரங்கள்
இயற்கை அழகால் சூழப்பட்ட இந்த அரண்மனை மூன்று அடுக்குகளைக் கொண்டுள்ளது. பங்காரு திருமலை நாயக்கர் என்பவர் பொது ஆண்டு 1849 முதல் 1862 வரையிலான காலத்தில் இவ்வரண்மனையைக் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. இவ்வரண்மனை, இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் கட்டப்பட்டிருக்கும் அரண்மனைகளின் அழகை ஒத்துக் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வரண்மனையில் தர்பார் மண்டபம், இலட்சுமி விலாச மண்டபம், பார்வையாளர்கள் மண்டபம், உக்கிராணம் என்றழைக்கப்படும் பொருட்கள் பாதுகாக்கப்படும் அறை, குதிரை மற்றும் யானை லாயம், பிரதானம் அச்சரவாசல் என்றழைக்கப்படும் நுழைவாயில் மற்றும் பல அறைகள் உள்ளன.
அரண்மனையில் உள்ள பெரிய சன்னல்கள் பெல்ஜியம் கண்ணாடி கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. அரண்மனையின் மேல் தளத்தில் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய தூண்கள் உள்ளன. மேலும் இம் மேல்மாடியில் பார்வை மாடமும் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வரண்மனையில் உள்ள தேக்கு மரத் தூண்களில் மகாராஷ்டிரப் பாணி மரவளைவுகள் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இங்குக் காணப்படும் அழகான இராமாயணக் கதை ஓவியங்களுக்கு விளக்கங்களும் எழுதப்பட்டுள்ளன. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட போடிநாயக்கனூர் அரண்மனை இன்றும் ஜமீன்தார் குடும்பத்தின் பாதுகாப்பில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரண்மனைகள் யாவும் ஒரு காலத்தில் வண்ணமிகு ஓவியங்களால் நிரப்பப்பட்டிருக்கும். கால ஓட்டத்தில் பல அரண்மனைகள் அழிந்து விட்டன. அதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிலும் பிற படைப்புகளிலும் காணப்படுகின்றன. இருப்பினும் தஞ்சாவூர், ராமநாதபுரம் மற்றும் போடிநாயக்கனூரில் உள்ள அரண்மனைகளில் மட்டும் ஓவியங்கள் எஞ்சியுள்ளன.
ஊர்
போடிநாயக்கனூர்
மாவட்டம்
தேனி
தகவல்
முனைவர் மாணிக்கராஜ்