கம்பர் கோயில்
Kambar Temple
அமைவிடம்
காளையார்கோவிலுக்கு அருகிலுள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ளது.
வரலாற்றுக்காலம்
சுமார் 150 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
கம்பர் (பொது ஆண்டு 1180 - 1250), தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த புலவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். "கம்பராமாயணம்" என்ற நூலை எழுதிய இவர், தமிழ் மொழியில் இன்னும் பல படைப்புகளை எழுதியுள்ளார். அவற்றுள் திருக்கை வழக்கம், ஏரெழுபது, கங்கை புராணம், சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
கம்பர் சோழ நாட்டின் தேரழுந்தூரில் பிறந்தார். அவரை ஆதரித்தவர் சடையப்ப வள்ளல். கம்பரின் கவித்திறனால் ஈர்க்கப்பட்ட சோழ மன்னர் மூன்றாம் குலோத்துங்கன் அவரை அரசவைக்கு அழைத்து, அவருக்குக் "கவிச்சக்கரவர்த்தி" என்ற பட்டத்தை வழங்கினார். கம்பரின் மகன் அம்பிகாபதி, சோழ மன்னனின் மகள் அமராவதியைக் காதலித்ததை அறிந்த மன்னன், கோபமுற்று அவனுக்கு மரணதண்டனை விதித்தார். இதனால் ஆழமான துயரத்தை அடைந்த கம்பர், சோழ நாட்டை விட்டுப் பாண்டிய நாட்டுக்குச் சென்றார். இறுதியில், காளையார் கோவிலுக்கு அருகிலுள்ள நாட்டரசன்கோட்டையில் தங்கி, அங்கேயே தனது கடைசி நாட்களைக் கழித்தார்.
கம்பன் இயற்கை எய்திய இடத்தில், அப்பகுதி மக்கள் ஒரு கல்லை நட்டனர். பல ஆண்டுகள் கழித்து அவ்விடத்தில் கம்பருக்குக் கோயில் எழுப்பினர். இவ்விடம் இப்போது ’கம்பர் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ’கம்பன் விழா’ நடைபெறுகிறது. இத்திருவிழாவின் இறுதி நாளில் கம்பனின் சமாதியில் குருபூசை நடத்தப்படுகிறது.
கம்பர் கோயில், கருவறை மற்றும் முன் மண்டப அமைப்பைக் கொண்ட சிறிய கோயிலாகும். முன் மண்டபப் பகுதியில் எட்டுத் தூண்களுடன் கூடிய சரிவான கூரை அமைப்பு காணப்படுகிறது. கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் கோயிலை நிறுவிய தமிழ்ச் சான்றோர் சிலையும் பால தண்டாயுதபாணி சிலையும் உள்ளன. விமானம் இல்லாத இந்தக் கோயில் கருவறையின் நடுவில் சிவலிங்கமும், அதன் இருபுறமும் விநாயகர், கம்பர் சிலைகளும் காணப்படுகின்றன.
இந்தப் பகுதியில் உள்ள ஊர்மக்கள் கம்பரின் நினைவாகப் பல பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கின்றனர். குறிப்பாக அவ்வூர் மண்ணின் ஒரு துளியைப் பாலில் கலந்து புதிதாகப் பிறந்த குழந்தைகளின் வாயில் வைக்கின்றனர். இவ்வாறு செய்வதன்மூலம் சிறந்த புலவரின் புலமையைப் பெற இயலும் என நம்புகின்றனர். இங்கு நாள்தோறும் நித்தியக்காலப் பூசை நடைபெறுகிறது. கம்பர் கோவில் ஓர் இலக்கிய அடையாளமாக மட்டுமல்லாமல், கவியரசர் கம்பனை நினைவுகூரும் ஒரு புனித இடமாகவும் திகழ்கிறது.
ஊர்
நாட்டரசன்கோட்டை
மாவட்டம்
சிவகங்கை
தகவல்
க.த. காந்திராஜன்