திண்டுக்கல் கோட்டை
Dindigul Fort
அமைவிடம்
மலை உச்சியில்
வரலாற்றுக்காலம்
விசயநகர - நாயக்கர்
கூடுதல் விவரங்கள்
திண்டுக்கல் மலைக்கோட்டை, சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்புவாய்ந்த மற்றும் மாறுபட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோட்டை பல ஆட்சிகளுக்குச் சாட்சியாக இருந்து, வட்டாரப் பாதுகாப்பு மற்றும் அதிகாரப் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. எதிரிப் படைகளின் ஊடுருவலைக் கண்காணிக்கவும், முக்கிய வணிக வழிகளை மேற்பார்வையிடவும் பொது ஆண்டு 16ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்டுவந்த முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் இக்கோட்டை கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. நாட்டின் பாதுகாப்புக்காகச் சுற்றியுள்ள சமவெளிகளைக் கண்காணிக்கும் வகையில் இதில் இராணுவத் தளவாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மலைக்கோட்டையின் உச்சியில் பழைமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. இங்குச் சிவபெருமான் பத்மகிரீஸ்வரராகவும், பார்வதி தேவி அபிராமி அம்மனாகவும் எழுந்தருளியுள்ளனர். திண்டுக்கல் மலைக்கோட்டை இராணுவத்தளமாக மாற்றப்பட்டதால் பக்தர்கள் வடிவில் ஒற்றர்கள் வரக்கூடும் என்று கருதிக் கோயிலில் இருந்த சிலைகள் அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 230 ஆண்டுகளாக மலைக்கோட்டைக் கோயிலில் வழிபாடுகள் நடைபெறவில்லை.
மதுரையை ஆண்ட மன்னர்களுக்குத் திண்டுக்கல் மலைக்கோட்டை சிறந்த இராணுவத்தளமாகப் பயன்பட்டது. எனவே மலைக்கோட்டையைப் பல மன்னர்கள் கைப்பற்ற முயன்றனர். திண்டுக்கல் மலைக்கோட்டையைத் திருமலைநாயக்கர், ஐதர்அலி, திப்புசுல்தான் ஆகியோர் விரிவுபடுத்திக் கட்டினர். ஐதர்அலி, திப்புசுல்தான் காலத்திலும் மலைக்கோட்டை இராணுவக்கேந்திரமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதற்குச் சாட்சியாகப் படைவீரர்கள் தங்கிய அறைகள், ஆயுதங்களை வைத்திருந்த கிடங்கு, பீரங்கியுடன் காணப்படும் பீரங்கி மேடு, சமையல் கூடம் போன்றவை இப்போதும் காணப்படுகின்றன.
பொது ஆண்டு 1784ஆம் ஆண்டில், மைசூர் ஆட்சியாளரான திப்பு சுல்தான் நாயக்கர்களிடமிருந்து கோட்டையைக் கைப்பற்றினார். பொது ஆண்டு 1790இல் மூன்றாவது ஆங்கிலோ-மைசூர்ப் போரில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி திப்பு சுல்தானைத் தோற்கடித்துக் கோட்டையைக் கைப்பற்றியது. கோட்டையைப் பலப்படுத்தும் விதமாக மாஜிஸ்டிரேட் நீதிமன்றங்கள் மற்றும் பிற காலனித்துவக் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 150 ஆண்டுகள் திண்டுக்கல் மலைக்கோட்டை ஆங்கிலேயர்களிடம் இருந்தது. கருங்கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட திண்டுக்கல் மலைக்கோட்டை பல போர்களைச் சந்தித்து இருக்கிறது.
திண்டுக்கல் கோட்டையைப் பல்வேறு பேரரசுகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் கைப்பற்றித் தங்கள் தேவைக்கேற்பக் கட்டுமானங்களை எழுப்பினர். ஆகையால், ஒரே இடத்தில் வெவ்வேறு பாணியைச் சேர்ந்த கட்டுமானங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள சிவன் கோயில் தமிழ்நாட்டுக் கட்டடக்கலையைக் காட்டுகிறது. திப்பு சுல்தானால் இஸ்லாமிய கலைப்பாணி அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் காலனித்துவ ஆட்சியாளர்களால் ஐரோப்பிய பாணிக் கட்டடக்கலையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கோட்டையில் காணப்படும் தடிமனான கிரானைட் சுவர்களால் ஆன முதன்மை நுழைவாயில், கண்காணிப்புக் கோபுரங்கள், ஆயுதக் கிடங்கு, மாஜிஸ்டிரேட் நீதிமன்றம், பிரிட்டிஷ் வீரர்களுக்காகக் கட்டப்பட்ட குடியிருப்புகள், பழைமையான சிவன் கோயில் போன்றவை முக்கியக் கட்டடக்கலை அம்சங்களாகும். சிறப்புவாய்ந்த திண்டுக்கல் மலைக்கோட்டை பல நூற்றாண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.
ஊர்
திண்டுக்கல்
மாவட்டம்
திண்டுக்கல்
தகவல்
க.த. காந்திராஜன்