Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

மட்பாண்டம் மற்றும் கடம் தயாரிப்பு

Pottery and Ghaṭam (musical instrument) Making

வகை

மட்பாண்டம்


கைவினைப் பொருளின் பெயர்

மட்பாண்டங்கள் மற்றும் கடம்


கைவினைக் கலைஞர் பெயர்

ரமேஷ் என்ற மட்பாண்டக் கலைஞர் தனது குடும்பத்தில் நான்காம் தலைமுறையாகக் கடம் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். மானாமதுரையில் தயாரிக்கப்படும் கடம் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படுவதை அவர் பெருமையாகக் கருதுகிறார்.


அங்கீகாரம்

புவிசார் குறியீட்டுச் சான்றிதழைப் பெற்றது


ஊர்

மானாமதுரை

மாவட்டம்

சிவகங்கை

பயன்பாடுகள்
இசைக்கருவி, மண்பாண்டப் பொருட்கள்
கூடுதல் விவரங்கள்

கடம் ஒரு வலிமையான இசைக்கருவியாகும். கர்நாடக இசை நிகழ்ச்சிகளில் மிருதங்கம், தவில் ஆகிய கருவிகளுடன் இணைந்து வாசிக்கப்படும் கடமும் ஓர் இயற்கையான தாள வாத்தியமாக விளங்குகிறது. மானாமதுரை கிராமம் "கடம்" என்னும் இசைக்கருவியின் தயாரிப்புத்தளமாக உலகமெங்கும் அறியப்படுகிறது. இவ்விடத்தில் உள்ள குலாலர் தெருவில், முந்நூற்றுக்கு மேற்பட்ட மண்பாண்டக் கலைஞர்கள், பல தலைமுறைகளாகத் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இந்தப் பாரம்பரியத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை ஆற்றின் அருகில் அமைந்துள்ள மானாமதுரையில் கிடைக்கும் மண்ணின் தன்மை, மண்பாண்டத் தயாரிப்புக்கு உகந்ததாகவுள்ளது. இதனால், மண்பாண்டங்கள் இப்பகுதியின் அடையாளமாக உள்ளது. இந்தத் தொழிலைச் சார்ந்து நேரடியாகவும் மறைமுகமாகவும், நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

மானாமதுரையில் தயாரிக்கப்படும் மண்பாண்டங்களில், "கடம்" எனப்படும் தாளக்கருவி சிறப்பானதாகும். ஏனெனில், இதன் தனித்துவமான வடிவமும், உறுதியான தயாரிப்பும், உலகமெங்கும் இருக்கும் இசைக்கலைஞர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. பிரபல கர்நாடக இசைக் கலைஞரான விக்கு விநாயகம் போன்றோர் மானாமதுரையில் தயாரிக்கப்பட்ட கடத்தை, ஐ.நா. சபையில் வாசித்துக்காட்டி நம்மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மானாமதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களான கள்ளர்வலசை, கல்குறிச்சி, ஆலங்குளம் ஆகிய ஊர்களிலிருந்து சிறந்த மணல் கலவை கொண்டுவரப்பட்ட பின், அதனைக் களிமண்ணுடன் சரியாகக் கலக்கி, செதுக்கி, கடத்தைத் தயாரிக்கின்றனர். மண் பிசையும் முறையும், சுடும் முறையும் மிக நுணுக்கமான பாரம்பரியச் செயல்முறையைக் கொண்டுள்ளன. இதில் உள்ள சிறிய வெற்றிடம், இசையின் சத்தத்தினை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. இங்குத் தயாரிக்கப்படும் கடம், 7 முதல் 9 கிலோ எடையுடன், வடிவமைக்கப்படுகிறது. மானாமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் கடம், பானைகள், சாமி சிலைகள், விளக்குகள், உண்டியல், அடுப்புகள் மற்றும் பல்வேறு மண்பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை தமிழகத்திலும், உலக அளவிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

வைகைக் கரையில் மானாமதுரைக்கு அருகில் அமைந்துள்ள கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மட்பாண்டங்கள் பல்வேறு அளவு மற்றும் வடிவங்களில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இப்பகுதியில் மட்பாண்டத் தொழில் 2000 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது தெளிவாகிறது.

தொழில் முறை
சிறு/குறு தொழில்
தகவல்

க.த. காந்திராஜன்

புகைப்படங்கள்
காணொலி

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்