Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

இரும்புப் பட்டறை

Iron Objects Production

வகை

உலோக வேலைப்பாடு


கைவினைப் பொருளின் பெயர்

இரும்புப் பொருட்கள்


கைவினைக் கலைஞர் பெயர்

இராஜேந்திரன் ஆசாரி(9159099625) - தற்போது 60 வயது ஆகும் இவர், கடந்த 40 வருடங்களாக இந்த இரும்புத் தொழிலைச் செய்து வருகிறார். இவர் தனது 20 வயதில் கட்டை வண்டி தயாரிப்பை முழுமையாகக் கற்றுக் கொண்ட பின், கட்டை வண்டியின் பயன்பாடு குறைந்து விட்டதால் இரும்பு தொழிலுக்கு மாறியதாக தெரிவிக்கிறார்.


பயன்பாடுகள்

அரிவாள், மண்வெட்டி, விறகு வெட்டும் அரிவாள், கடப்பாரை ஆகிய விவசாயக் கருவிகள் மற்றும் பெரிய அரிவாள், சூலம், ஈட்டி ஆகியவை கோயில் நேர்த்திக்கடனுக்காகத் தயாரிக்கப்படுகின்றன.


ஊர்

திருப்புவனம்

மாவட்டம்

சிவகங்கை

காட்சிப்படுத்தப்படும் இடம்

உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களிலேயே விற்பனையும் செய்கின்றனர்.

கூடுதல் விவரங்கள்

1. அறிமுகம்: சிவகங்கை மாவட்டம், வைகைக் கரையில் அமைந்துள்ள திருப்புவனத்தில் காலகாலமாக இரும்புத் தொழில் பட்டறைகள் இயங்கி வருகின்றன. முற்காலங்களில் இப்பகுதியில் வாழ்ந்துவந்த இரும்புக் கொல்லர்கள் பாண்டிய மன்னர்களின் கோரிக்கைக்கு ஏற்பப் போர்க்கருவிகள் மற்றும் பிற தளவாடங்களைச் செய்து வந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இப்போது இரும்பைக் கொண்டு விவசாயக் கருவிகள், வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகள், அரிவாள்கள் ஆகியவற்றைத் தயாரிக்கின்றனர். சில இன்றியமையாப் பொருட்களை அதிக அளவில் தயார் செய்து தங்கள் தொழிற்கூடங்களிலேயே காட்சிப்படுத்தி விற்பனை செய்கின்றனர். அதேபோல் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்பக் கருவிகளை வடிவமைத்துக் கொடுக்கின்றனர். முன்னர் இவ்வூர் மக்கள் அதிக எண்ணிக்கையில் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இப்போது சுமார் 20 குடும்பங்கள் மட்டுமே செய்து வருகின்றனர்.

2. மூலப்பொருட்கள்: இவர்கள் சுமார் 40 ஆண்டுகளாக ரைஸ் மில்லில் பயன்படுத்தப்படும் அல்லப் கத்தி; லாரி, பஸ், வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் "ஸ்ப்ரிங் பட்டை" ஆகியவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு அரிவாள்கள் தயாரிக்கின்றனர். இவை பழைய இரும்புக் கழிவுகளாகும். உருக்கு இரும்பில் தயாரிக்கப்படும் இந்தத் திருப்புவனம் அரிவாள் நீண்ட வாழ்நாளைக் கொண்டதாக விளங்குகிறது. சாமி அரிவாள் கோவிலில் நட்டு வைப்பதற்கு மட்டுமே தயார் செய்வதால் அது இரும்பில் தயார் செய்யப்படுகிறது. ஆனால் விறகு வெட்டும் அரிவாள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதால் 'ஸ்பிரிங் பிளேட்' எனப்படும் சுத்த உருக்கு கொண்டு தயார் செய்யப்படுகிறது. இது காய்ந்த விறகை வெட்டினால் கூட மழுங்காதவாறு தயாரிக்கப்படுகிறது.

3. உற்பத்தி முறை: இரும்பு போன்ற உலோகங்களை உருக்குதல், ஒட்டுதல் போன்ற செயற்பாடுகளுக்கு உயர்ந்த வெப்பநிலை தேவை. இந்தப் பயன்பாட்டுக்காகத் துருத்தி எனப்படும் கருவி முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது. சில காலம் முன்பு, ஒரு இரும்புப் பட்டறையில் இரும்புப் பொருட்களைத் தயாரிப்பதற்குக் குறைந்தது ஆறு பேர் தேவைப்பட்டனர். துருத்தி என்னும் கருவியை ஊதுவதற்கும், சம்மட்டி அடிப்பதற்கும், உலை முகத்தில் உட்கார்ந்து வேலை செய்வதற்கும், அரிவாளை வடிவமைப்பதற்கும், இரும்புக் கருவிகளைத் தேய்ப்பதற்கும் என ஆறு பேர் தேவைப்பட்டனர். ஆனால் இப்போது காற்றுத் தேவைக்காகத் துருத்திக்குப் பதிலாக இயந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இரும்புக் கருவிகளைத் தேய்ப்பதற்குக் கூட இயந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர். எனவே இப்போது நவீனக் கருவிகளின் துணையோடு மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குழுவால் இரும்புப் பொருட்களைத் தயாரிக்க முடியும். இரும்பு வேலை செய்வதற்கு அடுப்புக் கரி தேவைப்படுகிறது. ஆனால் இப்போது சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டதால் அடுப்புக் கரி அதிகம் கிடைப்பதில்லை. மூட்டத்துக் கரி வெடிக்கும் தன்மை கொண்டதால் அது இந்த வேலைக்குப் பயன்படுத்தப் படுவதில்லை.

4. உற்பத்தி செய்யப்படும் கருவிகள்: மன்னர்கள் ஆண்ட காலத்தில் விவசாயக் கருவிகள், ஆயுதங்கள் செய்வதோடு படை வீரர்களுக்கு வாள் செய்து கொடுத்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போது, வாடிக்கையாளர்கள் விறகு வெட்டும் அரிவாள், இளநீர் வெட்டும் அரிவாள், பாளைஅரிவாள், வாங்கரிவாள், கரும்பு வெட்டும் அரிவாள், நெல் கதிர் அறுக்கும் பன்னறுவாள், வாழைக்காய் வெட்டும் அரிவாள், வாழை இலை அறுக்கும் கத்தி, ஆட்டுக்குட்டிக்குக் குலை அறுக்கும் கத்தி, கோடரி, மண்வெட்டி, கடப்பாரை, பன்னறுவாள் மற்றும் பிற விவசாயக் கருவிகளைக் கேட்டு வாங்கிச் செல்கின்றனர்.

5. உற்பத்தி செய்யப்படும் வழிபாட்டு ஆயுதங்கள்: கோயில்களில் நேர்த்திக் கடன் செய்ய விரும்பும் பக்தர்களும்; கருப்புசாமி, சோனை சாமி, முனிசாமி போன்ற குல சாமிகளுக்கு அரிவாள் செய்து கொடுக்க விரும்பும் பக்தர்களும் இந்தத் திருப்புவனத்தில் உள்ள இரும்புக் கொல்லர்களிடம் வந்து அரிவாள்களை வாங்கிச் செல்கின்றனர். பக்தர்கள் தங்களுக்கு தேவையான அரிவாளின் அகலம், உயரம் மற்றும் வடிவத்தைக் காகிதத்தில் எழுதி / வரைந்து கொடுக்கின்றனர். எந்த உலோகப் பட்டையை, எந்த வடிவத்திற்கு, எவ்வாறு அடித்து உருவாக்க வேண்டும் என்பது பாரம்பரியமாக இத்தொழிலைச் செய்து வரும் இவ்வூர்க் கொல்லர்களுக்கு நன்றாகவே தெரிந்துள்ளது. இங்குத் தயாரிக்கப்படும் சாமி அரிவாள் மதுரை அழகர் கோவிலில் உள்ள எட்டாம் படி கருப்புசாமி, திருப்பாச்சேத்திக்குப் பக்கத்தில் உள்ள மாரநாடு கருப்புசாமி கோயில் ஆகிய இடங்களுக்கு நேர்த்திக்கடனாக வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்படும் நேர்த்திக்கடன் அரிவாள்கள் 2 முதல் 20 அடி வரை நீளமாக உள்ளன. இங்குத் தயாராகும் அரிவாள்கள் திருநெல்வேலி மாவட்டம் முதல் தமிழ்நாடு -ஆந்திரா எல்லை வரை உள்ள ஊர்களுக்கு வாங்கிச் செல்லப்படுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவம் கொண்ட சாமி அரிவாள் பயன்படுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவத்தைத் துல்லியமாகத் தயார் செய்து கொடுப்பதால், இவ்வூர் சாமி அரிவாள் செய்வதற்குப் பிரபலமான இடமாக இருந்து வருகிறது.

6. முடிவுரை: இங்குக் கோயில் நேர்த்திக்கடனுக்காகச் சுமார் 2 அடி முதல் 20 அடி வரை நீளமான அரிவாள்களைச் செய்து கொடுக்கின்றனர். இதை வாங்குவதற்கு உள்ளூர் மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். எனினும் அண்மைக் காலங்களில் இவர்கள் தயாரிக்கும் இரும்புப் பொருட்களுக்கான தேவை நலிவடைந்து கொண்டே வருகிறது. காரணம் விறகின் பயன்பாடு குறைந்து விட்டது. மேலும் விறகு வெட்டுவதற்கும் விவசாயத்திற்கும் அரிவாள் இல்லாமல் இயந்திரக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

தொழில் முறை
சிறு/குறு தொழில்
தகவல்

க.த. காந்திராஜன்

புகைப்படங்கள்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

க.த.காந்திராஜன்

காணொலி

க.த.காந்திராஜன்