Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

கைவினைப் பொருட்கள்

வகை

கைவினைப் பொருட்கள்


கைவினைப் பொருளின் பெயர்

விளாச்சேரி களிமண் பொம்மைகள்:


கூடுதல் விவரங்கள்

விளாச்சேரி களிமண் பொம்மைகள்: மண்ணில் உயிர் பூக்கும் கலை

மதுரை மாநகரின் பசுமலைக்கு அருகே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் விளாச்சேரி. இது வெறும் கிராமம் மட்டுமல்ல; தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த பெருமைமிக்க மண்ணும், தமிழகத்தின் கைவினை மரபைத் தன் தோள்களில் சுமந்து நிற்கும் ஒரு கலைக் கூடமும் ஆகும். இங்குள்ள ஒவ்வொரு பிடி மண்ணும் ஒரு கதையைச் சொல்லும், ஒவ்வொரு பொம்மையும் ஒரு பாரம்பரியத்தைப் பேசும்.

விளாச்சேரியின் இந்தப் பொம்மை உருவாக்கும் தொழில் 1965-ஆம் ஆண்டு சதாசிவ வேலர், சூரன் வேலர், தங்கராமன் வேலர் ஆகிய மூவரால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் அய்யனார் கோயில்களுக்குச் சுடுமண் குதிரைகளைச் செய்த இவர்கள், பின்னாளில் நவராத்திரி கொலு பொம்மைகளின் தேவையை உணர்ந்து இக்கலையை விரிவாக்கினர். இன்று சுமார் 6000 மக்கள் வாழும் இவ்வூரில், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக இக்கலையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன.

விளாச்சேரி பொம்மைகள் உருவாவதற்குப் பின்னால் நீண்ட கால உழைப்பும் நேர்த்தியான திட்டமிடலும் உண்டு:

ஜனவரி முதல் மார்ச் வரை களிமண் வார்ப்பு நடைபெறுகிறது. ஜூலையில் அடிப்படை வண்ணமும், ஆகஸ்ட் - செப்டம்பரில் இறுதி அலங்காரமும் செய்யப்படுகின்றன. முதலில் களிமண்ணால் மூல உருவம் செய்யப்பட்டு, 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' கொண்டு அச்சு எடுக்கப்படுகிறது. பின்னர் தேவைக்கேற்ப களிமண் அல்லது எடை குறைவாக இருக்க 'காகிதக்கூழ்' (Paper Pulp) கொண்டு பொம்மைகள் வார்க்கப்படுகின்றன. களிமண் பொம்மைகள் சூளையில் இட்டு சுடப்பட்டு உறுதியாக்கப்படுகின்றன. பின்னர் நச்சில்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த வண்ணங்கள் பூசப்பட்டு உயிர்ப்பிக்கப்படுகின்றன. விளாச்சேரி பொம்மைகள் வெறும் தெய்வ உருவங்கள் மட்டுமல்ல; அவை நம் வாழ்வியலின் பிரதிபலிப்பு. விநாயகர், கிருஷ்ணர், மீனாட்சி அம்மன் போன்ற தெய்வங்கள் முதல் கிராமிய விளையாட்டுகள், பறவைகள், விலங்குகள் மற்றும் புராணக் காட்சிகள் வரை அனைத்தும் இங்கே சிலைகளாக வடிவெடுக்கின்றன.

பண்டிகைகளின் சங்கமம்: நவராத்திரி கொலு பொம்மைகள் மட்டுமின்றி, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகளும் இங்கே நேர்த்தியாகத் தயாரிக்கப்படுகின்றன. விளாச்சேரி களிமண் பொம்மைகளின் தனித்துவமான தரம் மற்றும் கலைநயத்திற்காக இதற்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது. இன்று இந்தப் பொம்மைகள் தமிழகத்தின் மூலை முடுக்குகள் மட்டுமின்றி, வட இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுத் தமிழரின் பெருமையைப் பறைசாற்றுகின்றன. சுற்றுச்சூழலைப் பாதிக்காத இயற்கை மண்ணால் உருவாகும் இந்தச் சிலைகள், மதுரை மக்களின் கலாச்சார அடையாளமாகும். களிமண்ணை வெறும் மண்ணாகப் பார்க்காமல், அதில் கலைத்திறனைப் புகுத்தி உயிருள்ள சிலைகளாக மாற்றும் விளாச்சேரி கலைஞர்களின் கைவண்ணம் போற்றுதலுக்குரியது. மண் உயிராக மாறும் இடம் எதுவென்றால், அது சந்தேகமில்லாமல் விளாச்சேரிதான்!


தொழில் முறை

சிறு /குறு தொழில்


ஊர்

விளாச்சேரி

மாவட்டம்

மதுரை

தகவல்

க.த. காந்திராஜன்

புகைப்படங்கள்
காணொலி