Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை ஏடு
Cultural e-landmark magazine
Left Arrow

சமபந்தி திருவிழா

Feast of Equality

வகை

கிராமக் கோயில்


திருவிழாவின் பயன்

வேளாண்மைத் தொழில் மேம்படுதல். அந்த ஆண்டில் ஊர் மக்களுக்குள் இருந்த இடைவெளி, பகை, முரண், சாதி வேறுபாடு அனைத்தும் இவ்விழாவில் களையப்படுகின்றன. மதுகுடித்தவர் இவ்விழாவில் பங்கேற்றால் நோவு கண்டு இறப்பர் என்றும், சண்டை சச்சரவில் ஈடுபட்டால் அவருக்கும் ஆபத்து வரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். அதனால் என்ன நடந்தாலும் அனைவரும் நல்லிணக்கமாகப் பேசி முத்தையாவை வணங்கி உணவருந்திச் செல்கின்றனர்.


நடைபெறும் இடம்

பெருமாள்பட்டி கண்மாய்க் கரை அருகே உள்ள பாறையில் நடைபெறுகிறது.


நடைபெறும் தருணங்கள்

வைகாசி மாதம்


ஊர்

சொரிக்காம்பட்டி

மாவட்டம்

மதுரை

பாலினம்
ஆண்
விழாவின் வரலாறு / கதை

கரும்பாறை முத்தையா சாமி கோயில் சமபந்தித் திருவிழா என்பது பொதுவாக வைகாசி மாதம் ஒருநாள் அதிகாலையில் சொரிக்காம்பட்டி கோயில் முன்பாக நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் கண்மாயில் தண்ணீர் வற்றிய பின்பு, அதாவது கதிர் அறுப்புத் திருவிழா முடிந்த பிறகு, இந்த விழா நடைபெறுகிறது. தண்ணீர் வற்றுவதற்கு ஏற்ப இவ்விழா தை / மாசி மாதங்களுக்கும் மாற்றப்படலாம். சொரிக்காம்பட்டியில் உள்ள 70 குடும்பங்களும் பெருமாள்பட்டியில் உள்ள 150 குடும்பங்களும் இணைந்து இந்தக் கிடாய் வெட்டுத் திருவிழாவை நடத்துகின்றனர். அனைத்து இனக்குழுக்களும் இணைந்து இந்த வேளாண்மைத் திருவிழாவை நடத்தினாலும் ஊர் இவற்றை முதன்மையாக எடுத்துச் செய்கின்றது.

விழாவின் தொன்மை
இவ்விழா வேட்டைச் சமூகத்தின் வெளிப்பாடாக இருக்கலாம்.
விரத முறைகள்

குடி தவிர்த்தல், வீடு தூய்மை

பலியிடல்

நூற்றுக்கணக்கான கருங்கிடாய்கள் பலியிடப்படுகின்றன.

நேர்த்திக்கடன்

கிடாய் வெட்டு அன்று கருங்கிடாய்க் குட்டிகள் வாங்கி விடுதல்

குறி சொல்லும் முறை
திருநீறு போடுதல் உண்டு
பொறுப்பாளர்
ஊர்
நிகழ்ச்சிநிரல் விவரங்கள்

வைகாசி மாதம் முதல் நாள் இரவன்று எல்லாச் சாதிகளிலும் இருந்து முத்தையாவை வேண்டிக் கொண்டு கிடாய்களைக் கோயிலில் கட்டி விடுகின்றனர். அந்தக் கிடாயின் காதில் ஓட்டை போட்டுச் சாமிகளாக அறிவிக்கின்றனர். கருங்கிடாக்கள் மட்டுமே நேர்த்திக்கடனாக விடப்படுகின்றன. அந்தக் கிடாய் சொரிக்காம்பட்டி சுற்று வட்டாரக் கிராமங்களில் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். எந்த நிலத்திலும் மேயலாம். ஆறு மாதங்களில் அது முழு வளர்ச்சியடைந்து விடுகிறது என்று நம்புகின்றனர். திருவிழா நடைபெறுவதற்கு முதல் நாள் மாலையில் 300 பேர் கொண்ட குழு கூடுகிறது. கரும்பாறை முன் தேங்காய் பழம் வைத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. பொங்கல் வைக்கப்படுகிறது. இது முடிந்தவுடன் ஒரு கருங்கடா வெட்டப்படுகிறது. இவற்றைப் பூசாரி ஒருவர் செய்கின்றார். அதற்குப் பிறகு அனைத்து ஆட்டுக்கடாக்களும் வெட்டப்படுகின்றன. ஒரு குழு 60-70க்கு மேற்பட்ட ஆடுகளைத் தோலுரித்து இறைச்சி வகைகளைப் பிரிக்கின்றது. இரத்தம், ஈரல் ஆகியன ஒரு மண்பானையில் சேகரிக்கப்பட்டு முத்தையாவுக்குப் படையலாக வைக்கப்படுகின்றன. பின்பு 20க்கு மேற்பட்ட விறகு அடுப்புகளில் சமையல் செய்யப்படுகிறது. இரவு விடிய விடிய இந்தச் சமையல் நடைபெறுகிறது. அதிகாலையில் இருந்து சுற்றுப்புறக் கிராம மக்கள் ஐயாயிரத்திற்கு மேற்பட்டோர் வந்து விடுகின்றனர். சுற்றியுள்ள விளைநிலங்களில் அவர்களாக வரிசை அமைத்து அமருகின்றனர். குழம்பில் வேக வைக்கப்பட்ட கறியைத் தனியாகப் பிரித்து ஒரு மேடையில் குவித்து வைக்கின்றனர். வேகவைத்த சோற்றை இன்னொரு மேடையில் குவித்து வைக்கின்றனர். ஒரே நேரத்தில் பந்தி வைக்கப்படுகிறது. நூற்றுக்கு மேற்பட்டோர் இலைகளைப் போட்டுக் கொண்டே செல்கின்றனர். கறி குவியலில் இருந்து மண்வெட்டியால் வாளிகளில் அள்ளி வைக்கப்படுகிறது. வாளியைக் கொண்டு செல்பவர், தன் கையால் கறியை அள்ளி ஒவ்வொரு இலையிலும் போட்டுக் கொண்டே செல்கிறார். அனைவருக்கும் கறி வைக்கப்பட்ட பின்பு நான்கு பேர் ஒரு வேட்டியில் சோற்றை அள்ளிச் சென்று, ஒரு பெரிய தட்டால் ஒவ்வொரு இலையிலும் சோற்றை அள்ளி அள்ளி வைக்கின்றனர். பின்னால் செல்பவர்கள் குழம்பை ஊற்றிச் செல்கின்றனர். இவ்வாறாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்கின்றனர்.

சிறப்பம்சங்கள்

சொரிக்காம்பட்டி கண்மாய் அருகில் இருக்கும் முத்தையாவுக்குப் பழம் தேங்காய் பொங்கல் வைத்துவிட்டுக் கிடாய்க்களை வெட்டுகின்றனர்.

தகவல்

முனைவர் இரத்தினகுமார்

புகைப்படங்கள்

ந.இரத்தினக்குமார்

ந.இரத்தினக்குமார்

ந.இரத்தினக்குமார்

ந.இரத்தினக்குமார்

ந.இரத்தினக்குமார்

ந.இரத்தினக்குமார்

ந.இரத்தினக்குமார்

ந.இரத்தினக்குமார்

ந.இரத்தினக்குமார்

ந.இரத்தினக்குமார்

காணொலி

ந.இரத்தினக்குமார்